Thursday, July 30, 2009

விவரமா? விஷமமா?


கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் நூல்கள் அச்சிடப்பட்டு, வெளியிடப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருவதை 'கண்ணன்'கள் கண்கொண்டு பார்க்க வேண்டாமா? புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றுவிடாமல் பங்கேற்றும், தாங்களே புத்தகக் கண்காட்சிகள் நடத்தியும், பேருந்துகளில் நூல்களை ஏற்றிக் கொண்டு நகரம், நகரமாக, ஒன்றியம், ஒன்றியமாக, கிராமம், கிராமமாகப் போய் ஆண்டு முழுதும் விற்பனை செய்து வருவதைக் காணாமல் கண் இருந்தும் குருடராகக் 'கண்ணன்'கள் இருக்கலாமா? ஓராண்டில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் தந்தை பெரியாரின் நூல்களை விற்று வருவது பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்பதாவது 'கண்ணன்'களுக்குத் தெரியுமா?

இரண்டு ரூபாய் முதல் 50 ரூபாய் வரை மிகவும் மலிவாக நூல்களை வெளியிட்டு, சாமான்ய மக்களும் வாங்கிப் பயன் அடையுமாறு பாடுபடுவது பெரியார் அறக்கட்டளை நிறுவனம் என்பதாவது தெரியுமா?

இந்த மாதத்தில் நெய்வேலி புத்தகச் சந்தையில் சிறந்த பதிப்பக விருது நீதியரசர் வெங்கட்ராமன் அளித்தார் என்பதாவது தெரியுமா?

குற்றம் காணும் முன், குறைகூறும் முன், அனைத்தையும் அறிந்து செய்வது நல்லது. 'அரங்கின்றி வட்டாடிய' வகையில் இருக்கக் கூடாது. "கல்லாதான் சொற்காமுறுதல்" எப்படிப்பட்டது என்பதை வள்ளுவர் தெரிவித்திருக்கிறார்.

பெரியாரின் கருத்துகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என போதி மரத்தடியில் அமர்ந்து ஞானோதயம் பெற்றுக் கூற வேண்டியதேயில்லை. அப்பணி ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைவரையும் சென்றடையச் செய்யப் போகிறேன் எனக் கூறிக்கொண்டு அய்யாயிரம் ரூபாயை எனக்கு அனுப்புங்கள் எனக் கடிதம் எழுதித் தூண்டுவது, அதற்கான வழி என எப்படிக் 'கண்ணன்'களால் பார்க்க முடிகிறது?

'கண்ணன்'களால் சிலாகித்துப் பேசப்படும் 'புதிய வெளியீட்டாளர்கள்' தயாரித்திருப்பதாகச் சொல்லப்படும் நூலுக்கே, அடிப்படையும், ஆதாரமும் ஆனவை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்ட குறுந்தகடுகளே! அதை அப்படியே படி எடுத்துப் பரப்பும் நபர்கள், தாங்கள் ஏதோ "உ.வே.சா.வேலை" செய்ததைப் போலக் காட்டிக் கொண்டால், 'கண்ணன்'கள் நம்பலாம். தமிழ்நாட்டில் கண் திறந்திருப்பவர்கள் நம்பமாட்டார்கள்.
ஏடுகள் மட்டுமல்ல, எல்லாருமே ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நிறுவனத்திற்காக நிறுவனமே வழக்குப் போட முடியாது. பொறுப்பாளர் வழக்குப் போடவேண்டும். அப்படி வழக்கு தாக்கல் செய்த நிறுவனத்தின் செயலாளர், கி.வீரமணி அவர்கள். நிறுவனத்தையும் அதன் செயலையும், வருவாயையும், வழக்கையும் கவனிக்க வேண்டும் என்பதற்காகவென்றே நியமிக்கப்பட்டிருக்கும் அதன் செயலாளர். ஆகவே, அவர் கையெழுத்துப் போட்டு வழக்கு மனுதாக்கல் செய்திருக்கிறார்.

இந்த உண்மை 'விவரமானவர்களுக்கு'த் தெரியும். ஆனால் 'விவகாரம்' செய்பவர்களக்குத் தெரியவில்லை அல்லது தெரிந்தும் மறைக்கிறார்கள். இதற்கென்ன காரணம்? வீரமணி என்பவர் மீதான காழ்ப்பும் கோபமும்தானே காரணம்?

ஏன் இந்தக் காழ்ப்பு? பெரியார் இயற்கையெய்திய போதே, இயக்கம் போய்விடும் என எதிர்பார்த்தார்கள்; விரும்பினார்கள். "இயக்கம் இருக்கும்; எப்போதும்போல் இயங்கும்" என்று பிரகடனப்படுத்தியதோடு, தந்தை பெரியாரை, அவர்தம் தத்துவங்களை, இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலும் பரப்பிக் கொண்டிருக்கிற பணியைச் செய்வதால்தானே, அவரைப் பாதகர் என்கிறார்கள்?

பரப்பாமல் பாதுகாத்து வைக்கிறார் என்பது விவரம் தெரியாமல் அல்லது விஷம எண்ணத்தோடு சொல்லப்படுவது என்றே உறுதியாகிறது. இதில், நீங்கள் எந்தப் பக்கம் கண்ணன்? 'விவரம்' பக்கமா? 'விஷமம்' பக்கமா? 'விவரம்' என்றால் மன்னிக்கலாம் 'விஷமம்' என்றால்.....?

அப்படி, இப்படி, அப்பாவிபோல, அறியாமையை வெளிக்காட்டி எழுதி, வந்து 'சுயரூப'த்தைக் காட்டிவிட்டீர்களே, கண்ணன்? பகுத்தறிவையே பகுத்துப் பார்க்கத் துணிந்து விட்டீர்களே! பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதே! நீங்கள் எல்லாம் பகுத்தறிவுக்கு எதிரிகள் - அதனால் திரு.வீரமணியை வெறுப்பவர்கள்! அறிவு நாணயத்தோடு ஒத்துக்கொள்வீர்களா?

உண்மையையும் போலியையும் உலகம் புரிந்தே வைத்துள்ளது. காமாலைக் 'கண்ணன்'களுக்குத்தான் புரியவில்லை. "திருத்தி எழுதப்பட்ட தீர்ப்புகள்" தெரியுமா?

இடைக்காலத் தீர்ப்பு 24 மணிநேரத்தில் வேறு உரு எடுத்துள்ளது. அதற்குள்ளாகவே அல்ப சந்தோஷத்தில் அனந்த சயனம் செய்தவர்கள் 'அம்போ' ஆகிவிட்டார்கள். வழக்கும் முடியவில்லை, வாதமும் முடியவில்லை. முழுமையாக முடிந்த பின்னர் பேசலாம்.
அதற்குள்ளாகவே, பகுத்தறிவு, பரப்புரை, காப்பு; பூட்டு என்றெல்லாம் விமர்சனங்கள் வேண்டாமே! அதிலும் கடல் கடந்து இருந்து, கதையே தெரியாமல் எதையும் கூற வேண்டாமே! வெளி உலகமே தெரியாமல் வளர்ந்தவன், அரிச்சந்திர நாடகத்தின் மயான காண்ட நடிப்பைப் பார்த்துவிட்டு வெட்டியான் அரிச்சந்திரனைத் தாக்கிய கதையாகக் 'கண்ணன்கள்' இருக்கக் கூடாது என ஆசைப்படுகிறோம்!

எங்களைப் "பெரியாரின் முன் முட்டாள்கள்" எனக் கூறிக் கொள்வதைப் போலவே அவரின் இயக்கத்தில் எங்களை ஒப்படைத்துக் கொண்ட போர் வீரர்கள்! செயல் மறவர்கள்.

எங்களுக்கு எந்தப் பெயரைச் சூட்டினாலும் நாங்கள் மயிரளவுகூடக் கவலைப்பட மாட்டோம்!